×

குடந்தை, தி.மருதூர், திருப்பனந்தாள் 3 ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவினர் அமோக வெற்றி

கும்பகோணம், ஜன. 12: கும்பகோணம், திருவிடைமருதுார், திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
கும்பகோணத்தில் 27 ஊராட்சிகளும், திருவிடைமருதுாரில் 22 ஊராட்சிகளும், திருப்பனந்காளில் 17 ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் கட்டமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று பிரதிநிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில், தேர்தல் நடத்தும் அலுவலராக தயாளவிநாயகன் அமுல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த காய்த்ரி அசோக்குமார் தலைவராகவும், துணைதலைவராக கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பார்வையாளராக கோட்டாட்சியர் வீராச்சாமி கலந்து கொண்டார்.
இதே போல் திருவிடைமருதுார் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ், முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் சுபாதிருநாவுக்கரசு தலைவராகவும், துணை தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முருககண்ணன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் தேவிரவிச்சந்திரன் தலைவராகவும், துணை தலைவராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பனந்தாளில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 10 திமுக, 1 காங்கிரஸ், 1சுயேட்சை, 1 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர் ஆதரவு அளித்துள்ளனர். கும்பகோணத்தில் தலைவர் மற்றும் துணை தலைவராக வெற்றி பெற்றவர்களை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் ஏராளமான திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மகாமககுளக்கரை மற்றும் தாராசுரத்திலுள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : DMK ,election ,President ,union ,Dharmadur ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...